Wednesday, April 29, 2009


நூன்மரபின் ஒழிபே மொழிமரபு


தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலே நமக்குக் கிடைத்த முதல் நூல்; முதன்மையான நூல். இத்தொல்காப்பியம் முழுமைக்கும் தொல்காப்பியர் நூன்மரபில் இலக்கணம் கூறியுள்ளார். நூன்மரபின் ஒழிபாக மற்ற 26 இயல்களும் அமைந்துள்ளன எனவும் எழுத்ததிகாரம் முழுமைக்கும் இலக்கணம் கூறும் இயல் நூன்மரபு எனவும் கூறுவர். எனினும் நூன்மரபிற்கு அடுத்து அமைந்த மொழிமரபு எவ்வாறு நூன்மரபின் ஒழிபாக விரவிவருகின்றது என்பதையும் தொல்காப்பியக் கட்டமைப்பையும் விளக்குவதாக இக் கட்டுரை அமைகிறது.

மொழியும் இலக்கணமும்
        வாழும்மொழி ஒவ்வொன்றுக்கும் கட்டமைப்பும் இயங்குதிறனும் உண்டு. இந்தக் கட்டமைப்பும் இயங்குதிறனும் மொழிக்கு இல்லையென்றால் அந்த மொழியை நம்மால் கையாளமுடியாது. அந்தக் கட்டமைப்பையும், இயங்குதிறனையும் நம்முடைய ஆராய்ச்சி வசதிக்கேற்ப நாம் ஒலிநிலை, சொல்நிலை, தொடர்நிலை, சந்திநிலை, பொருண்மைநிலை எனப் பல நிலைகளாகப் பகுத்துக்கொண்டு ஆராய்கிறோம். இப்படித் தொடர்ந்து நாம் கண்டறிந்த உண்மைகளை விளக்குவதுதான் இலக்கணம். அத்தகைய இலக்கணமும் இலக்கியம் எழுதப்படுவதற்கு ஏற்ப வேறுவேறு வகையில் அமையும்.
தொல்காப்பியச் சிறப்பு
தொல்காப்பிய நூற்பாக்கள் பழகுதமிழ்ச் சொற்கள் கொண்டவை. தடங்கலின்றிப் படிப்பதற்குரிய இன்னோசையுடையன. சொல்வளம் நிறைந்தவை. இடக்கு முடக்கற்ற தொடரோட்டம் வாய்ந்தவை. 2500 ஆண்டுகளுக்குப் பின்னும் இத்தொன்னூல் ஓரளவு தமிழ் கற்றோர்க்கும் விளங்குவதற்குக் காரணம் இதன் நூற்பா அமைப்பேயாகும். பார்த்தவுடன் உருவத்தைக் கண்ணாடி காட்டிவிடுவதுபோல் படித்தவுடன் நூற்பாவின் பொருள் விளங்கிவிட வேண்டும் என்ற நல்லியல்பைக் கடைபிடித்துத் தொல்காப்பியர் எழுதியுள்ளார்.
இலக்கண நூலாக இருந்தபோதிலும் இலக்கிய வனப்புடையதாக இந்நூல் விளங்குகிறது. ஒரு பெரியநூலை எப்படி அமைப்பது, தொகுப்பது, வகுப்பது, விரிப்பது போன்ற கூறுகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்குவது தொல்காப்பியம். இதனாலேயே பனம்பாரனார் மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி என்று பாயிரம் பாடியுள்ளார்.
தொல்காப்பியத்தின் எழுத்து, சொல், பொருள் அதிகாரங்களில் (3ஜ்9) 27 இயல்கள், 1611 (1595) நூற்பாக்கள் உள்ளன. முதல் இயலாக நூன் மரபும் இறுதி இயலாக மரபியலும் அமைந்துள்ளன. எனவே நூலான இலக்கணத்திற்குத் தொல்காப்பியம் முழுவதிலும் மரபு கூறியுள்ளார் என்பதை உணரமுடிகிறது.
ஏற்றதொரு பொருள் ஏற்றாதொரு தொடரில் அமைந்துவிட்டால் அப்பொருள் மீண்டும் வரும்போதெல்லாம் அத்தொடரினையே மேற்கொள்வர். புதிய தொடர் உருவாக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்து தொல்காப்பியர் தானெடுத்து மொழிதல் என்னும் முறையினையும் பின்பற்றியுள்ளார். தொல்காப்பியம் முழுமைக்கும் நூன்மரபினைத் தானெடுத்து மொழிதலுக்குப் பயன்படுத்தியுள்ளார்.
தொல்காப்பியத்தில் புறநடை
தொல்காப்பியர் மொழிநிலை இயற்கையையும் அதற்குமேல் வரும் செயல் இயற்கையையும் செவ்வென அறிந்தவர். வழிவழி வரும் மொழி மாற்றங்களைத் தழுவிக்கொள்ளாவிட்டால் நிலை இயற்கையும் கெட்டுவிடும் என்பதனைத் தெளிந்தவர். எனவே எதிர்கால வளர்ச்சிகளைத் தழுவிக்கொள்ளும் தழுவுவிதிகளையும் எழுதியுள்ளார். இந்நிகழ்வு விதிகளே புறநடை என்று அழைக்கப்படுகின்றன. அவை புறநடையல்ல மொழியினைத் தடைசெய்யாது காக்கும் புற நடை என்றும் கூறப்படுகிறது. இந்தக் கருத்தையே அடிப்படையாக வைத்து நன்னூலார் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று கூறியுள்ளார்.
நூன்மரபு கூறும் இலக்கணம்
தமிழ்மொழியிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை, எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு, எழுத்துக்களின் வகைப்பாடு, அவற்றின் பெயர்கள், எழுத்துக்கள் ஒன்றோடொன்று சேர்ந்துவருகின்ற சேர்க்கைநிலை முதலான செய்திகளைத் தொல்காப்பியர் இந்த இயலில் எழுத்தின் அடிப்படைகளாக எடுத்துக் கூறுகிறார். சுருக்கமாகச் சொன்னால் தமிழ்மொழியில் உள்ள எழுத்துக்களைத் தனிமைப்படுத்தி, தனிநின்ற எழுத்துக்களின் இயல்புகளை இந்த இயலில் விளக்கியிருக்கிறார்.
எழுத்துக்கள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன்மரபைத் தொடங்கும் ஆசிரியர் குறில், நெடில், மாத்திரை, உயிர்மெய், வடிவு, உயிர்மெய், அவற்றின் பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு, வினா எழுத்துக்கள் என இவற்றைக் கூறுவதாக 33 நூற்பாக்களை அமைத்துள்ளார். இதனை எண், பெயர், முறை, வடிவு, அளவு, மயக்கம் என்னும் ஆறுவகையாகப் பிரிக்கலாம்.
மொழிமரபு கூறும் இலக்கணம்
மொழியாக்கம், மெய்களின் இயக்கம், போலி, மொழிக்கு முதலாகும் எழுத்துக்கள், மொழிக்கு ஈறாகும் எழுத்துக்கள் என மொழிமரபு கூறும் இலக்கணச் செய்திகளை ஆறு வகையாகப் பிரிக்கலாம்.
எழுத்துக்கள் சேர்ந்து சொற்களாக ஒலிக்கப்படும்போதுதான் சார்பெழுத்துக்கள் உருவாகின்றன. எனவே சார்பெழுத்துக்களுக்குரிய விளக்கத்தை மொழிமரபில் கூறுகிறார். சொல்லின் அமைப்பு, சொற்களின் வகைப்பாடு, தனி எழுத்துக்களை மொழியில் குறிப்பிட்டு வழங்குகின்ற வழக்குமுறை, மூவகை மொழிகள், போலி, தனி எழுத்துக்கள் மொழியில் பயின்றுவரும்போது அவற்றில் ஏற்படுகின்ற நுண்ணிய ஒலிப்பு மாற்றங்கள், மொழிக்கு முதலில் வருகின்ற எழுத்துக்கள், மொழியின் இறுதியில் வருகின்ற எழுத்துக்கள், ஒரு எழுத்துக்கு மாற்றாக மொழியில் வருகின்ற மாற்று எழுத்துக்கள் அல்லது போலி முதலான செய்திகளை இந்த இயலில் கூறுகிறார்.
நூன்மரபு: தொல்காப்பியம் முழுமைக்கும் ஒர் இலக்கணம்
தொல்காப்பியத்திற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் எழுத்ததிகாரத்தின் ஒன்பது இயல்களுள் முதலில் கூறப்பெறும் நூன்மரபிற்குக் காரணம் கூறியுள்ளார். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின் இத்தொல்காப்பியம் எனும் நூற்கு மரபாந்துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து உணர்த்தினமையின் நூன்மரபு எனும் பெயர்த்தாயிற்று என்பர்’.
இளம்பூரணர் இவ்வோத்து என் நுதலிற்றோவெனின் அதுவும் அதன்பெயர் உரைப்பவே அடங்கும். இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றால் தொகுத்து உணர்த்தலின் நூன்மரபு என்னும் பெயர்த்து. இதனுட் கூறுகின்ற இலக்கணம் மொழியிடை நின்ற எழுத்திற்கன்றித் தனிநின்ற எழுத்திற்கென உணர்க என்கிறார்.
நூன்மரபு பெயர்க்காரணம்
நூல் என்பது நூல்போன்ற ஒப்பினால் ஆகிய பெயர். அந்நூல் என்றது இதில் கூறப்படும் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் பொருந்திய இலக்கணம் என்றும் நூல் என்பது தொல்காப்பியம் என்னும் பிண்டத்தை என்றும் இவ்வோத்திலக்கணம் எனப்படுபவை எழுத்துக்களின் பெயர், முறை, தொகை, அளவு, குறைவு, கூட்டம், இனம், மயக்கம் என்பனவாம் என்றும் ஏனையவற்றை இவ்வோத்து அதிகாரத்துள் பிற ஓத்துக்களில் உணர்த்துவர் என்றும் நச்சினாரக்கினியர் விளக்குகிறார்.
மொழிமரபு பெயர்க்காரணம்
மொழிக்கு எழுத்தால் வரும் மரபு உணர்த்தினமையின் மொழிமரபெனப்பட்டது என்று இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.
இது தனிநின்ற எழுத்திற்கன்றி மொழியிடை எழுத்திற்கு இலக்கணம் கூறுவதனாம். மொழியது மரபுணர்த்தினமையின் இவ்வோத்து மொழி மரபெனக் காரணப்பெயர்த்தாயிற்று என நச்சினார்க்கினியர் பெயர்க்காரணம் கூறுகிறார்.
எனவே உரையாசிரியர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப ஆய்வோமேயானால் தொலைக்காட்சிகளில் முதலில் தலைப்புச் (முக்கிய) செய்திகளைக் கூறிவிட்டு, பின்னர் அந்தச் செய்திகளைப் படக் காட்சிகளுடன் விரிவாக விளக்குவதனைப் போன்று காணப்படு கின்றது. நூன்மரபில் கூறியவற்றிற்குப் புறநடையாக மொழிமரபில் 20- க்கும் மேற்பட்ட நூற்பாக்கள் அமைந்துள்ளன.
நூன்மரபின் ஓழிபாக மொழிமரபில் வந்தவை
1. சார்பெழுத்துக்கள்
சார்பெழுத்துக்களின் வகையையும் பெயரையும் (குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்) நூன்மரபில் குறிப்பிட்ட ஆசிரியர் அதனை சார்பெழுத்துக்கள் என்னும் நிலையில் மொழிமரபின் முதல் ஏழு நூற்பாக்களில் விளக்கியுள்ளார்.
     1. மியா என்னும் உரையசைச் சொல்லில் யா என்னும் எழுத்துக்கு முன் உள்ள மகர இகரம் குறுகி ஒலிக்கும். 
2. மேற்கூறிய இகரம் தனிமொழியில் குறுகுவது மட்டுமல்லாமல் இருசொற் புணர்ச்சியிலும் குறுகி ஒலிக்கும்.
3. தனி நெட்டெழுத்திற்குப் பின்பும் பல எழுத்துக்களைக் கொண்ட தொடர்மொழிகளின் ஈற்றிலும் ஆறு வல்லெழுத்துக்களைச் சார்ந்து குற்றியலுகரம் வரும்.
4. மேற்கூறிய உகரம் தனி மெய்களில் குறுகுவது மட்டுமல்லாமல் இருசொற் புணர்ச்சியிலும் குறுகி ஒலிக்கும்.
5. ஆய்தப் புள்ளி குற்றெழுத்தின் பின்னும் உயிருடன் சேர்ந்த வல்லெழுத்துக்களுக்கு முன்னும் வரும்.
6. மேற்கூறிய ஒருமொழியில் வருவது மட்டுமல்லாமல் சொற்கள் புணரும்போதும் ஆய்தம் தோன்றி ஒலிக்கும்.
7. ஒலிக்குறிப்பாக வரும் ஆய்தம் ஒலி குறுகாமல் அளபெடை போல நீண்டு ஒலிக்கும். எனினும் அளபெடை போல ஆய்த எழுத்து எழுதப்படுவதில்லை.
2. ஒரெழுத்து ஓருமொழி
, , , , , ஔ ஆகிய ஏழும் இரண்டு மாத்திரையுடைய நெட்டெழுத்துக்கள் என்று நூன்மரபில் (நூற்பா-4) கூறியவர் மொழிமரபில் நெட்டெழுத்துக்கள் ஏழும் ஓரெழுத்து ஒருமொழிகள் என்று அதன் மற்றுமொரு பண்பைக் கூறுகிறார்.
நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமெழி.
(தொல். எழுத்து. 43)
3. அளபெடை
நீண்ட மாத்திரையுடைய அளபெடை, எழுத்துப் பெறவேண்டுமானால் இரண்டளபுடைய நெடிலையும் அதற்கு இனமான ஓர் அளபுடைய குறிலையும் பெற்று மூன்று மாத்திரையாக நீண்டு ஒலிக்கும் என்று கூறியுள்ளார்.
நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய
கூட்டி யெழூஉதல் என்மனார் புலவர். (தொல். எழுத்து. 6)
செய்யுளிலும் வழக்கிலும் ஓசையும் பொருளும் பெறுதல் காரணமாக இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து மேலும் நீட்டியொலித்தலை விரும்பினால் அவ்வளபுடைய எழுத்துக்களைக் கூட்டி அவ்வொலியை எழுப்பலாம் என்று மாத்திரை நிலையில் கூறிய தொல்காப்பியர் அதற்கு விளக்கமாக
குன்றிசை மொழிவயின் நின்றிசை நிரைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே (தொல்.எழுத்து. 41)
மொழிமரபில் அதற்கு அளபெடை என்ற பெயரையும் குறிப்பிட்டு, பின்னர் அது ஓசை குறைவான சொற்களிடத்திலே நெட்டெழுத்திற்குப் பிறகு அதற்கு இனமான குற்றெழுத்து அமைந்து நின்று ஓசையை நிறைவிக்கும் என்று கூறுகிறார்.
4. மெய்ம்மயக்கம்
மெய்ம்மயக்கம், வேறுபட்ட இரண்டு மெய்கள் மயங்கும் முறை, ஒத்த மெய்கள் மயங்கும் முறை ஆகியவற்றை நூன்மரபில் 22 முதல் 30 ஆம் நூற்பாவரை மெய்ம்மயக்கத்தில் கூறியவர் அதற்குப் புறநடையாக மொழிமரபில்
தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்நிலை மயக்கம் மான மில்லை (தொல். எழுத்து. 47)
எல்லா மெய்யெழுத்தும் மொழியிடையின்றித் தம் வடிவின் இயல்பைச் சொல்லும் இடத்தில் மெய்ம்மயக்க நிலையில் மயங்கி வருவது குற்றமில்லை என்று கூறுகிறார்.
5. ஈரொற்று உடனிலை
, , ழ என்றும் புள்ளி முன்னர் மொழிக்கு முதலாக வரும் ஒன்பது எழுத்துக்களும் (க,,,, ,,, ,ய) மொழிக்கு முதலில் வராத ஙகரமும் தோன்றி மயங்கும் என்று நூன்மரபில் கூறியவர்
யரழ வென்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்தும் ஙகரமொடு தோன்றும்  (தொல். எழுத்து. 29)
மொழிமரபில் ய, , ழ என்னும் மூன்று ஒற்றுக்களின் பின் க, , , , , , , ம என்னும் எட்டு மெய்களும் ஈரொற்று உடனிலைகளாக வரும் என்று அதற்குப் புறநடை கூறியுள்ளார்.
யரழ என்னும் மூன்றுமுன் னொற்றக்
கசதப ஙஞநம ஈரொற் றாகும்.   (தொல். எழுத்து. 48)
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (தொல். எழுத்து. 15)என்று நூன்மரபில் கூறியவர் மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும் (தொல். எழுத்து. 46) என்று மொழிமரபில் மெய்யெழுத்துக்களின் பண்பை விளக்கியுள்ளார்.
6. மகரக்குறுக்கம்
அரையளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகுந் தெரியுங் காலை (தொல். எழுத்து. 13)
வேறொரு எழுத்தினது ஓசையின்கண் மகர ஒற்றுத் தன் அரை மாத்திரையிலிருந்து குறுகிக் கால்மாத்திரை பெறுவது சிறுபான்மையாக நடக்கும் என்று நூன்மரபில் கூறிய ஆசிரியர்,
னகாரை முன்னர் மகாரங் குறுகும்  (தொல். எழுத்து. 52)
னகாரத்தை அடுத்த மகரம் குறுகும் என்று செய்யுளில் ஈரொற்று வரும் என்பதற்கு இலக்கணம் கூறும்போது மகரம் குறுகுமிடத்தைக் கூறியுள்ளார்.
7. மாத்திரை
குற்றுயிர்கள் ஒரு மாத்திரையுடையன, நெட்டுயிர்கள் இரண்டு மாத்திரையுடையன என்று நூன்மரபில் எழுத்துக்களுக்கு மாத்திரை கூறிய ஆசிரியர் மொழிமரபில்
அகர இகரம் ஐகாரம் ஆகும்’ (ஐவனம் - அஇவனம் - அய்வனம்)
அகர உகரம் ஔகாரம் ஆகும்’ (ஔவை - அஉவை - அவ்வை)
என்றும் அகரத்தின் பின் இகரம் மட்டுமல்லாமல் யகரமாகிய புள்ளி வந்தாலும் (ஐவனம் - அய்வனம்) நெட்டெழுத்து வடிவுபெறும் என்றும் ஐ, ஔ குறுகி ஒரு மாத்திரை பெற்று நிற்கும் என்றும் புறநடை கூறியுள்ளார்.
முடிவுரை
தொல்காப்பியத்தில் நூன்மரபின் எச்சமாகவே மொழிமரபு அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. எழுத்துக்களின் எண்ணிக்கை 33 என்று கூறியவர் நூன்மரபை 33 நூற்பாக்களில் அமைத்துள்ளார். ஆகையினால் அதன் புறநடை, எச்சம், மேலும் கூறவேண்டியன போன்றவற்றை மொழிமரபில் 49 நூற்பாக்களாகக் கூறியுள்ளார் எனவும் கருதமுடிகிறது. தொல்காப்பிய இலக்கணம் மொழியின் இயல்புகளை அறிந்து மொழி வளர்ச்சிகளுக்கு இடம்கொடுத்து உருவாக்கப்பட்ட மாபெரும் ஆய்வுநூல் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

துணைநின்ற நூல்கள்


1. இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

2. இளம்பூரணர், (உ.ஆ)., தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 2005 சாரதா பதிப்பகம், சென்னை.
3. சுந்தரமூர்த்தி, கு., (ப.ஆ.) தொல்காப்பிய எழுத்ததிகாரம் இளம்பூரணம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
4. சுந்தரம், இல. (உ.ஆ)., தொல்காப்பியம் எழுத்ததிகாரம், மாணவர் உரை 2008 மல்லிகா பதிப்பகம், அறந்தாங்கி.
5.  மாணிக்கம், வ.சுப., தொல்காப்பியக் கடல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.