Wednesday, May 26, 2010

பாரதிதாசன் பல்கலைக்கழக ‘சுவடிக்காட்சியகம்’ இணையதள தொடக்கம்

புதியதோர் உலகம் செய்வோம் என்ற முத்திரை மொழிக்கேற்பச் செயல்பட்டுவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இன்று சுவடி உலகத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைகொள்கிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கலைஞர் வளர்தமிழ் மையத்தில் தமிழ் மரபுக்களஞ்சியத் திட்டம் பேராசிரியர் முனைவர் இராதா செல்லப்பன் அவர்களின் தலைமையில் செயல்பட்டுவருகிறது.
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று முழங்கினான் பாரதி. அந்த வகையில் பல்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கும் தமிழ்ச் சுவடிகளையும் அரிய நூல்களையும் மின் வடிவில் பாதுகாக்கும் பணி முழுமூச்சாக இங்கு நடைபெறுகிறது. தமிழ் மொழியின் ஓலைச்சுவடிகளையும் அரிய நூல்களையும் மின்வடிவப் பாதுகாப்பு செய்வது இத்திட்டத்தின் நோக்கம். தமிழ் வளர்த்த ஆதினங்கள், கல்வி நிறுவனங்கள், நூல் நிலையங்கள், தமிழ்ச் சங்கங்கள் முதலானவை பல ஆண்டுகளாக முயன்று, சேகரித்து சேமித்து வைத்துள்ள பழைய அரிய நூல்களையும் சுவடிகளையும் மின்வடிவில் கொண்டுவருகிறோம். இவற்றைக் குறுவட்டாகவும் ஆக்கியுள்ளோம். இத் தமிழ்க் கருவூலங்களை மின்வடிவப் பாதுகாப்பு செய்யும் நோக்கத்துடன் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவற்றை மின் வடிவாக்கி சுவடிக்காட்சியகத்தை உருவாக்கியுள்ளது.
இக்காட்சியகம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் 24.05.2010 இன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு. பொன்னவைக்கோ அவர்களால் தொடங்கிவைக்கப்பெற்றது. இதனால் தமிழறிஞர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் சங்க இலக்கியச் சுவடிகள், இலக்கணச் சுவடிகள் போன்ற பல சுவடிகளையும் அரிய நூல்கள் மற்றும் பிற நூல்களின் முதற் பதிப்புகளையும் பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தங்களிடம் இருக்கும் சுவடிகளை மேலேற்றம் செய்யும் வசதியும் இத்தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுவடி மற்றும் நூல் கொடை செய்ய விரும்புவோர் இவ்வசதியைப் பயன்படுத்தித் தம்மிடமிருக்கும் தமிழ்ச் செல்வத்தை அனைவருக்கும் உவந்தளிக்கும் பேறு பெறலாம். இந்த வாய்ப்பினைத் தமிழுலகிற்குத் தருவதில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மகிழ்கிறது. பாடபேத ஆய்விற்கும் புதிய சுவடிப் பதிப்பிற்கும் இந்த முயற்சி பயனளிக்கும் என்று நம்புகிறோம்.
சுவடிகளைப் படம்பிடித்து உதவியவர்கள் திரு கு. கண்ணன்,
திரு. ஞா. செல்வகணபதி ஆகியோர். இணையதள உருவாக்கத்தில் பங்குபெற்றவர்கள் பாரதிதாசன் தகவலியல் மையத்தின் தலைவர் முனைவர் ந. இராமானுஜம்,
திரு. பா. ஆனந்த், திரு. வே. பாலசுப்பிரமணியன், மற்றும் தமிழ் மரபுக்களஞ்சியக் கணினித்திட்ட அமைப்பாளர் திரு. இல. சுந்தரம் ஆகியோர். தமிழ்க் கருவூல மின்வடிவப் பாதுகாப்பு நோக்கத்திற்கு உதவும் வகையில் ஏட்டுச் சுவடிகளையும் நூல்களையும் ஒளிப்படம் எடுக்க அனுமதித்த ஆதினங்களுக்கும் பிற சமய, கல்வி நிறுவனங்களுக்கும் எங்கள் நன்றி.

24.05.2010
திங்கள்