Monday, May 23, 2011


தொல்காப்பியரின் வகைப்பாட்டு உத்திகள்



தொல்காப்பியர் தமிழ் மொழியின் இயல்புகளையும் மரபுகளையும் வைத்து அக் கால வழக்குகளை விதிகளாகவும் கோட்பாடுகளாகவும் பதிவுசெய்ய முயன்றார். இத்தகைய முறைக்குத் தொகுத்தல், வகுத்தல், விரித்தல் என்னும் நூலாக்க மரபினைப் பின்பற்றியுள்ளார் என்பது தெளிவு. நூலாக்க மரபு உட்பட சமூக மரபுகளை அடியொற்றிப் படைக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பொருளதிகார மரபியலில் நூல் உருவாக்கத்திற்கான 32  உத்திகளைக் கூறுகிறார். இவற்றுள்  10 உத்திகள் வகைப்பாடு தொடர்புடையனவாக அமைந்திருக்கின்றன. எனவே, தொல்காப்பியர் தம் நூற்பாக்களில் பயன்படுத்தியுள்ள வகைப்பாட்டு உத்திகளைக் கண்டறிந்து விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
தொல்காப்பியர் இலக்கணப் பொருண்மைகளை வகைப்பாடு(Classification) செய்கிறார் என்பதை விளக்குவதாகவும் எண்ணிக்கை முறையில் எண்களின் பெயர்களையும் எண்ணிக்கையையும் அவர் எவ்வாறு கையாண்டிருக்கிறார், பகுத்திருக்கிறார் என்பதையும் ஆராய்வதாக இக் கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியர் இலக்கணக் கூறுகளை வகைப்படுத்த முயன்றாரே தவிர பெரும்பாலும் வரையறைகளைக்(Definitions) கொடுக்கவில்லை என்பர். தொல்காப்பிய உரையாசிரியர்களும் பிற்கால இலக்கண நூலாசிரியர்களுமே ஒவ்வொன்றிற்கும் வரையறைகளைக் கூறுகின்றனர். இந் நிலையை வைத்துப் பார்க்கும்போது தொல்காப்பியர் தம் கால வழக்கில் உள்ளவற்றையும் அதற்கு முன் தோன்றிய இலக்கணக் கூறுகளையும் வகைப்படுத்த முயன்றார் எனலாம். ஏனெனில் அவர் பயன்படுத்திய இலக்கணக் கூறுகளைப் பற்றிய தெளிவும் வரையறையும் அக்காலச் சமுதாயத்திற்குத் தெரிந்த ஒன்றாக இருந்திருக்கலாம்.
        தொல்காப்பியத்துள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பன்னிரெண்டு, பதின்மூன்று, பதினெட்டு, நூறு, அறுநூற்று இருபத்தைந்து, ஆயிரம் போன்ற எண்கள் நேரடியாகவும் பதினான்கு, முப்பத்திமூன்று, இருபது, இருபத்தொன்று, இருபத்தைந்து, முப்பத்திரண்டு, முப்பத்தினான்கு, பதிமூன்றாயிரத்து அறுநூற்றுத் தொன்னூற்றொன்பது ஆகியவை பெருக்கல் வாய்பாட்டின் அடிப்படையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் முதலாம் எண் முதல் எட்டாம் எண் வரை வேற்றுமை உருபுகளைக் குறிக்கவும் இருசீர், முச்சீர் என, சீரின் வகைளைக் குறிக்கவும் ஒருவர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர் என மனிதரைக் குறிக்கவும் எண்வகை அவத்தைகளைக் குறிக்கவும் என இடத்திற்கேற்றார்போல் எண்களை ஆகுபெயர்களாக அமைத்து நூற்பாக்களை உருவாக்கியுள்ளார்.
இவ்வாறு ஓர் எண்ணுப்பெயரை எண்ணிக்கைக்காகவும் வேற்றுமை உருபினைக் குறிக்கவும் சீரினைக் குறிக்கவும் வகைப்பாட்டினைக் குறிக்கவும் மனிதரைக் குறிப்பதற்காகவும் இடத்திற்கு ஏற்றாற்போல் பயன்படுத்தியிருக்கிறார். எனினும், தொல்காப்பியத்துள் வகைப்பாடுகளை எண்ணிட்டுக் கூறிய நெறியே இங்கு நோக்கப்படுகிறது.
தொல்காப்பியத்தில் எண்களைப் பயன்படுத்தும்போது நேரடியாக எண்ணுப்பெயர்களையும் பெருக்கல் வாய்பாட்டின் அடிப்படையிலும்  பயன்படுத்தியுள்ளார். பன்னிரெண்டு, பதினெட்டு, பதினைந்து என்று நேரடியாகச் சில இடங்களிலும் 'இருநால்', 'ஆயிருநான்கே'(2X4=8), 'ஈர் ஐந்து'(2X5=10), 'ஈர் ஆறு'(2X6=12), 'ஈர் ஏழ்'(2X7=14), 'இருபாற்பட்ட ஒன்பதின்'(2X9=18), 'முந் நால்'(3X4=12), 'மூ ஐந்து'(3X5=15), 'மூ ஆறு'(3X6=18), 'முப்பதினொருமூன்றும்'(3X10+3=33), 'நால் இரண்டு'(4X2=8), 'நால் மூன்றே'(4X3=12), 'நால் நான்கு'(4X4=16), 'நால் ஐந்து'(4X5=20), 'நால் எட்டு'(4X8=32), (5X5=25 + 25X5=125 + 125X5 = 625), 'ஆறு இரண்டு' (6X2=12), 'அறு மூன்றும்'(6X3=18), 'ஆறு ஆறு'(6X6=36), 'எழு மூன்று'(7x3=21) எனப் பெருக்கல் வாய்பாட்டின் அடிப்படையிலும் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். இப்படிப் பல இடங்களில் கூறுவதற்குக் காரணம் யாப்பமைதிக்காகவா? தெரிந்த ஒன்றை வைத்துத் தெரியாதவற்றை விளக்குதல் என்பதற்காகவா? என்பன போன்றவை  ஆராயத்தக்கன.
வகைப்பாட்டு உத்திகளை மூன்று நிலைகளில் நோக்கலாம்:
1.    முதல், இடை, கடை என நிலைப்பாட்டைக் கூறுதல்.
2.    வகைகளின் மொத்த எண்ணிக்கையைக் கூறி, அவற்றை விளக்குதல்.
3.    வகைப்பாடுகளுள் சிலவற்றைப் பட்டியலிட்டு இதுபோல மற்றவை வரும் எனல்.
v  ஒரு பொருண்மையின் வகைப்பாட்டை 2, 3, 4, 5, 6, 12, 16, 18, 21 என்று பகுத்து, இது இத்தனை வகைப்படும் என்று கூறுகிற முறை.
v  சில கூறுகளுக்குப் பெயரிடும் முறையில் அவை வகைப்பாடுபோலத் தோன்றும். (அ இ உ அம் மூன்றும் சுட்டு. 31)
v  ஓர் இலக்கணப் பொருண்மையின் வகைகளைக் கூற, ஒரு நூற்பாவும் பின்னர் வகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனி நூற்பாக்களாகவும் வகைப்படுத்தி விளக்குகிற தன்மை காணப்படுகிறது.
v  ஓர் இலக்கணப் பொருண்மை இத்தனை வகைப்படும் அவை இவையிவை என்று கூறி, அவற்றை விளக்குகிற முறையைச் சில இடங்களில் காணமுடிகிறது. (வண்ணம்தாமே நால் ஐந்து என்ப 1459)
v  ஒருசில இடங்களில் வகைகளைக் கூறி, பின்னர் மேற்கூறிய இவை அனைத்தும் அதன் வகைகளாகும் என்று கூறுகிற தன்மையையும் அறியமுடிகிறது.
v  ஒரு வகைப்பாட்டுப் பட்டியலைக் கூறி, பின்னர் தனியாக மூன்றினைக் கூறி, இவை உள்ளிட்ட அனைத்தும் இதற்குரியது என்று கூறுகிற முறையைக் காணமுடிகிறது(1033).
v  ஒரு வகைப்பாட்டைக் கூறி, பின்னர் பல நூற்பாக்களுக்குப் பிறகு அவற்றுள் முதல் நான்கும் இதற்குரியது, பின்னர் நான்கும் இதற்குரியது என்று ஒதுக்குகிற முறையும் காணமுடிகிறது. உதாரணமாக, எண்வகை மணங்களைக் கூறி, அவற்றுள் முதல் மூன்றும் கைக்கிளைக்குரியது என்றும் பின்னர் நான்கும் பெருந்திணைக்குரியது என்றும் கூறுகிற முறைமை. (முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே 1048, பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே 1049)
v  ஏதாவது ஓர் ஐந்து வகைப்பாட்டினைக் கூறி இவை இதற்குரியன என்று கூறும் முறை. ('செய்து செய்யூ செய்பு செய்தென, செய்யியர் செய்யிய செயின் செய செயற்கு என, அவ் வகை ஒன்பதும் வினையெஞ்சுகிளவி' 713)
v  ஒரு பொருண்மை இத்தனை வகைப்படும் என்று முதலில் கூறி, அதில் முதலாவதாக உள்ளது இத்தனை உட்பிரிவுகளைக் கொண்டது, இரண்டாவதாக உள்ளது இத்தனை வகைப்பாடுகளைக் கொண்டது என வகைப்படுத்தும் முறை.
v  முதலில் எண்ணிக்கையைக் கூறி, பின் வகைகளைப் பட்டியலிடுவது, முதலில் பட்டியலிட்டு, பின்னர் இந்த எண்ணிக்கையுடையவை அனைத்தும் இதற்குரியன என்று கூறுகிற முறை.
v  முதலும் முடிவும் கூறி, இடையில் பலவாறு வரும் எனல்.
v  முதல், இடை, கடை என அவற்றின் நிலைப்பாடு கூறுதல்.
v  ஒரு பொருண்மையின் முதன்மையான வகைகளை முதலில் பட்டியலிடுவது, பின்னர் அதனைச் சார்ந்து வருவனவற்றைப் பின்னர் அதனோரற்றே எனக்கூறி அதனோடு சேர்த்தல்.
v  ஒருசிலவற்றை வகைப்படுத்தும்போது அவற்றின் வகைப்பாடு இத்தனைதான் என்று அவரால் வரையறுக்க முடியாதவற்றை எண்ணிக்கை கூறாமல் வகைப்பாடுகளில் ஒருசிலவற்றைக் கூறி, இதுபோன்ற பலவும் வரும் எனல்.
v  ஓர் இடத்தில் கூறிய கருத்து அல்லது விதியைப் பயன்படுத்த இருவேறு உத்திமுறையைத் தொல்காப்பியர் பின்பற்றியுள்ளார். ஒன்று, மேற்குறிப்பிட்டதைப்போன்று என மாட்டேறு உத்திமுறையையும். மற்றொன்று மேற்குறித்த நூற்பாவையே மீண்டும் எடுத்தாளுதல் இந்த முறையில் ஒரே நூற்பாவை இரண்டு முதல் ஆறு முறை மீண்டும் மீண்டும் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளமையைக் காணமுடிகிறது. (தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல - 307, 328, 377, 402)
Ø  பழைய வழக்கு, புதிய வழக்கு என்று உணரும் வகையில் தனித்தனியாக வகைப்படுத்திக் கூறியது. 'வேற்றுமைதாமே ஏழென மொழிப'(546), 'விளிகொள்வதன்கண் விளியொடு எட்டே'(547), 'அவைதாம், பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி என்னும் ஈற்ற'(548). வேற்றுமை என்பது ஏழு வகைப்படும் என்று கூறுவர், விளி என்பதோடு சேர்த்து எட்டு வகைப்படும் என்று கூறுகிறார். அவை பெயர், ஐ, ஆல், கு, இன், அது, கண், விளி ஆகியனவாகும் என்கிறார். இவ்வாறு தனித்தனியாக முதலில் ஏழு என்று கூறி, பின்னர் எட்டு என்று கூறக் காரணம், வேற்றுமை ஏழு வகை என்பது அவருக்கு முந்தைய இலக்கணிகளின் கூற்று. தம் காலத்தில் தோன்றிய விளியை வேறுபடுத்தவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு அமைத்திருக்கிறார். இத்தகைய விளி வேற்றுமைக்குத் தனி இயலமைத்திருக்கிறார் என்பது இங்கு நோக்கத்தக்கது.
Ø  பெரிய எண்ணிக்கையில் உள்ள வகைகளைக் கூற முதலில் மொத்த வகைகளைக் கூறி, பின்னர் ஒவ்வொன்றினையும் பட்டியலிட்டு அதனதன் இயல்புகளை விளக்குகிற முறையையும் காணமுடிகிறது. உதாரணமாக, வண்ணம் நாலைந்து வகைப்படும் என்று கூறி, பின்னர் அவைதாம் என இருபது வகைகளையும் வரிசைப்படுத்துகிற முறை.
Ø  ஒருசில இயல்களின் முதல் நூற்பாவை அந்த இயல் முழுக்க விரிக்கப்படும் ஒரு இலக்கணப் பொருண்மை பற்றிய வகைப்பாட்டைக் கூறி, பின்னர் அவற்றுள் ஒவ்வொன்றாக எடுத்து அதன் உட்கூறுகளை விளக்குவதாக அமைத்துள்ளார். உதாரணமாக, செய்யுள் உறுப்புகளைக் கூறும்போது இரண்டு நிலைப்பாடுகளில் பாகுபடுத்துகிறார். முதலில் மாத்திரை, எழுத்தியல், அசை என ஆறுதலையிட்ட அந்நாலைந்து எனப்படும் என 26 உறுப்புகளைக் கூறி, பின்னர் அம்மை, அழகு, தொன்மை, தோல் போன்ற எட்டு உறுப்புகளையும் கூறுகிறார். இவற்றிலிருந்து இலக்கணக் கூறுகளை அதனதன் இயல்பு அடிப்படையில் வகைப்படுத்தியிருக்கிறார் என்பதை அறியமுடிகிறது. இதில் மேலும் ஒரு சிறப்பு, முதல் நூற்பாவின் வகைகளை விளக்குவதே அடுத்து அந்த இயல் முழுவதும் அமைந்த 234 நூற்பாக்களுமாகும்.
        மனனக் கல்வி முறையைக் கருத்தில்கொண்டே தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்கள் பெரும்பாலும் நுட்பமான, சுருங்கிய நூற்பாக்களைக் கொண்டமைந்துள்ளன. பல இடங்களில் முன்நூற்பாவில் குறிக்கப்பெற்ற செய்திகளைத் தொடர்ந்து வரும் நூற்பாவிலும் குறிக்கவேண்டியிருப்பின், முன் நூற்பாவிலுள்ள தொடர்களை அப்படியே எடுத்தாளாமல் 'அவைதாம்' 'அவற்றுள்' 'முதலிய' சொற்சீரடிகளைப் பயன்படுத்தி, முன்நூற்பாவோடு தொடர்புபடுத்தியுள்ள பாங்கினைத் தொல்காப்பியம் முழுமையும் காணமுடிகிறது.
        மேலும், ஒரு நூற்பாவில் கூறப்பட்ட விதி அந்த நூற்பாவைத் தொடர்ந்துவரும் நூற்பாவிற்கோ அல்லது பின்னர் வேறொரு இடத்தில் வரும் நூற்பாவிற்கோ பொருந்துவதாக இருப்பின் முன் நூற்பாவில் சொல்லப்பட்ட விதி மீண்டும் கூறப்படாமல்இயல’, ‘அவற்றோரன்ன’, ‘அற்றென மொழிபஎன்பன போன்ற சொற்களால் முன்நூற்பாவோடு இயைபுபடுத்தப்பட்டிருக்கும் தன்மையைக் காணமுடிகிறது. இத்தகைய உத்தியைமாட்டேறு உத்திமுறை என்று உரையாசிரியர்கள் கூறுவர்.
        பல இடங்களில் ஒரு பொருண்மையின் வகைப்பாட்டினைக் கூறும்போது வரிசையாக எண்ணிக்கை முறைப்படி இல்லாமல் நான்கு நான்கு அல்லது ஏழு ஏழு வகைகளாகக் கூறி மனப்பாடம் செய்யும் முறைக்கு ஏற்ப 'என்றா', 'ஆகுநவும்', 'எனாஅ' போன்ற விட்டிசைப்புச் சொற்களைப் பயன்படுத்தி, பல்வேறு எளிமையாக்க உத்திமுறைகளைப் பின்பற்றியுள்ளார். வகைப்படுத்தும்போதும் பட்டியலிடும்போதும் 'உம்' என்னும் விகுதியையே பெரும்பாலும் பின்பற்றியுள்ளார்.
தொல்காப்பியர் ஒரே எண்ணைக் குறிப்பதற்கு அதன் பல்வேறு மாற்று வடிவங்களைக் கையாண்டுள்ளார். ஏனெனில் யாப்பமைதிக்காகவும் சொற்பயன்பாட்டு முறைக்காகவும் இப்படிக் கையாண்டிருக்கலாம் என அறுதியிட்டுக் கூறமுடிகிறது.
ஒன்று-ஓர்-முதல், இரண்டு-இரு-ஈர், மூன்று-மூ, நான்கு-நால், ஐந்து-ஐ, ஆறு-அறு, ஏழு-ஏழ் போன்ற எண்களுக்குரிய மாற்றுவடிவங்களை இடத்திற்கேற்றார்போல் பயன்படுத்தியுள்ளார்.
ஒரு பொருண்மையை வகைப்படுத்துவதற்கும் பட்டியலிடுவதற்கும் வேறுபாடு உண்டு. வகைப்பாடுகளை இரண்டு, மூன்று, நான்கு, பத்து, நூறு, ஆயிரம் என உறுதிபடக் கூறுகிறார். செயல்பாடு என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடக்கூடியது. அதனால், இத்தகைய நிலைகளில் பகுக்கலாம் அல்லது இத்தகை நிலைப்பாடுகள் உண்டு என்று கூறி, இதுபோன்று பலவாறு அமையும் என்று பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ள தன்மையை அறியமுடிகிறது. பொருளதிகாரத்தில் சில இடங்களில் இத்தனை வகைகளாகப் பிரிக்கலாம் என உறுதியிட்டுச் சிலவற்றை வகைப்படுத்துகிறார். எனினும் செய்யுளியல் தவிர மற்றவை வாழ்வியல் கூறுகளாக இருப்பதால் அவற்றை இவ்வளவுதான் என்று வகைப்படுத்த முடியவில்லை. எனவே அவற்றைப் பட்டியலிட்டுப் பலவற்றைக்கூறி, இதுபோன்று பலவாறு அமையும் என்று கூறிச்செல்கிறார். இதற்காக, 'அன்னபிறவும்' என்று 19 இடங்களிலும், 'அன்ன' என 43 இடங்களிலும்பிறவும் எனப் பயன்படுத்தியுள்ளார்.
'என்மனார் புலவர்' என்று தொல்காப்பியத்தில் 66 இடங்களிலும் என்மனார் என்று 9 இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து தொல்காப்பியர் அவருக்கு முன்பிருந்த அல்லது இலக்கணிகள் கூறிய மரபுகளைக் கூறுவதை அறியமுடிகிறது.  
ஒருசில இலக்கணக் கூறுகளுக்குப் பெயர்சூட்டும் நிலைகூட வகைப்பாடு கூறுவனபோன்று காணப்படுகின்றன. ஆனால் வகைகள் வேறு, பெயர் கூறுவது வேறு என்று உணர்ந்து கவனமாக நூற்பாக்களை உருவாக்கியிருக்கிறார்.
நூன்மரபில், அதாவது நுவலப்படும் மரபில் உள்ளவற்றை வகைப்படுத்தி வரிசைமுறையில் பாகுபடுத்தி அவை ஒவ்வொன்றிற்கும் கலைச்சொல்லாக்கம் அல்லது பெயர்சூட்டும் முறையை மேற்கொண்டிருக்கிறார். தொல்காப்பியம் முழுமையிலும் பல இடங்களில் வகைப்படுத்தும்போது பலவற்றை மூன்றாகப் பகுத்து அதற்குள் விளக்க முயன்றிருக்கிறார் என்று நினைக்கத்தோன்றுகிறது.